வானூரில், ரூ.6¾ கோடியில் புதிய நீதிமன்ற கட்டிட பணிகள் - அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
வானூரில் ரூ.6¾ கோடியில் புதிய நீதிமன்ற கட்டிட பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை புதியதாக கட்டுவதற்கு அரசால் ரூ.6 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் புதிய நீதிமன்றங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்ட வானூர் அருகே புளிச்சப்பள்ளம் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு புதிய நீதிமன்றங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி வனஜா, தலைமை குற்றவியல் நீதிபதி முத்துக்குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு புதிய நீதிமன்றங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் சக்கரபாணி எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கிற ரகுராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.