காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா ஒரேநாளில் 442 பேருக்கு தொற்று

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 442 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது.;

Update: 2020-07-26 01:14 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள மேல்படப்பை பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் மற்றும் மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண், ஆதனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 442 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 796 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 4,273 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,437 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள செங்குன்றம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் 48 வயது ஆண், நரசிங்கப்பட்டி காலனியை சேர்ந்த 48 வயது பெண், வள்ளல் சீதக்காதி தெருவை சேர்ந்த 35 வயது வாலிபர், 26, 22 வயது இளம்பெண்கள் கொரோனா தொற்றுக்குள்ளாயினர்.

மேலும், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் 29 வயது வாலிபர், பலராமன் தெருவை சேர்ந்த 28 வயது வாலிபர், கோவிந்தராஜபுரம் 5-வது தெருவை சேர்ந்த 39 வயது வாலிபர், டிபன்ஸ் காலனி 7-வது தெருவை சேர்ந்த 47 வயது ஆண், எம்.டி.எஸ்.அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 26, 28, 27, 30 வயது வாலிபர்கள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 764 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 8,787 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். 2,755 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 2 முதியவர்கள், 36 வயது ஆண், 52 வயது பெண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் 2 பேரும், காமராஜபுரம், தாகினிப்பேட்டையில் தலா ஒருவர் என 4 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள மணவாள நகரில் 5 பேருக்கும், மப்பேடு பகுதியில் 3 பேருக்கும், கீழ்நல்லாத்தூர் பகுதியில் 3 பேருக்கும், பேரம்பாக்கம், மேல்நல்லாத்தூர், போளிவாக்கம்,கொண்டஞ்சேரி, இருளஞ்சேரி, நயப்பாக்கம் போன்ற பகுதிகளில் தலா ஒருவர் என நேற்று ஒரே நாளில் மொத்தம் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூரில் உள்ள வங்கியில் பணிபுரியும் வங்கி மேலாளர், துணை மேலாளர் மற்றும் வங்கி பணியாளர்கள் என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களுடன் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 385 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 11 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7,373 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

3,823 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 6 பேர் இறந்துள்ளதையடுத்து, மாவட்டம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்