உத்தமபாளையம் அருகே, முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

உத்தமபாளையம் அருகே முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2020-07-25 22:15 GMT
உத்தமபாளையம், 

உத்தமபாளையம் அருகே உள்ளது கோகிலாபுரம். இங்குள்ள முல்லைப்பெரியாற்றில் சிலர் மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடி குழாய் மூலம் சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், அப்பிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கு கோகிலாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோகிலாபுரம் பொதுமக்கள் நேற்று தண்ணீர் கொண்டு செல்லப்படும் குழாய்களை பறித்து எடுத்து போட்டு சுருளி அருவி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்