“எம்.ஜி.ஆர். சிலையை அவமதித்தவர்கள் கொரோனா வைரசை விட மோசமானவர்கள்” அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்

“புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலையை அவமதித்தவர்கள் கொரோனா வைரசை விட மோசமானவர்கள்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசத்துடன் கூறினார்.

Update: 2020-07-25 23:00 GMT
கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.36 லட்சத்தில் அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா நடந்தது.

இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், 2 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், நேதாஜி, வீர தமிழன் ஸ்போர்ட்ஸ் கிளப்புகளுக்கு அம்மா விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,300-க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய வசதியை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலையை அவமதிப்பு செய்தது சமூக விரோதிகளின் சதி. அவர்கள் கொரோனா வைரசை விட மோசமானவர்கள். சமுதாயத்துக்கு ஊறு விளைவிப்பவர்கள், மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைப்பவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு, புறந்தள்ளி தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை மக்களும் அடையாளம் கண்டு புறந்தள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார் பாஸ்கரன், நகர பஞ்சாயத்து அலுவலர் ஜோதிபாசு, உதவி பொறியாளர் அன்னம், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்