நெல்லை அருகே பயங்கரம்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை 5 பேருக்கு வலைவீச்சு

நெல்லை அருகே லாரி டிரைவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-07-25 22:15 GMT
நெல்லை,

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே தாதனூத்து இந்திரா காலனி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் கல்லத்தியான் (வயது 32), லாரி டிரைவர். இவர் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இவர் நேற்று மதியம் 3.30 மணி அளவில் அங்குள்ள சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 5 மர்மநபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் திடீரென்று கல்லத்தியானை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அவர் அலறியடித்தவாறு தப்பியோட முயன்றார்.

ஆனாலும் மர்மநபர்கள் கல்லத்தியானை ஓட ஓட விரட்டிச் சென்று, அவரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த கல்லத்தியானின் தம்பி ஆறுமுகம் (23) ஓடி வந்தார். அப்போது அவரையும் மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு, மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கல்லத்தியான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட கல்லத்தியானின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு கல்லத்தியானின் உறவினரான சாமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கல்லத்தியான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். எனவே, சாமிநாதனின் கொலைக்கு பழிக்குப்பழியாக கல்லத்தியானை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தலைமறைவான 5 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்