தேனி அரசு மருத்துவமனையில் பயங்கர தீ - மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புகைமூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.;

Update: 2020-07-25 05:25 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் அங்கு கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொரோனா சிறப்பு வார்டு அருகே ஒரு அறை உள்ளது. இந்த அறையில் துப்புரவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினி உள்ளிட்ட ரசாயன பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று காலை திடீரென அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது. அறையில் இருந்த ரசாயன பொருட்கள் பற்றி எரிந்ததால் மருத்துவமனை வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ரசாயன பொருட்கள் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் புகை மூட்டத்தால் தீயணைப்புத்துறையினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மேலும் புகை மூட்டத்தால் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வார்டில் உள்ள ஜன்னல் கதவுகள் உடனடியாக அடைக்கப்பட்டது. இதுதவிர அருகில் இருந்த மற்றொரு வார்டில் இருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த நோயாளிகளை ஸ்டிரெச்சர் மூலம் வெளியேற்றப்பட்டு திறந்த வெளியில் தங்க வைக்கப்பட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அதன்பிறகே நோயாளிகள் மீண்டும் வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்