கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெறாமல் வந்த நடிகர்கள் விமல், சூரி மீது வழக்கு - ஆர்.டி.ஓ. தகவல்

கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெறாமல் வந்த நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக ஆர்.டி.ஓ. சிவக்குமார் தெரிவித்தார்.;

Update: 2020-07-25 05:45 GMT
கொடைக்கானல்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் கொடைக்கானலை அடுத்த அடர்ந்த வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் அனுமதி பெறாமல் சென்று அங்கு மீன் பிடித்தனர். இதுகுறித்து எழுந்த சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையின் சார்பில் நடிகர்கள் விமல், சூரிக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனிடையே நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் பேரிஜம் ஏரிக்கு செல்ல காரணமான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடைக்கானலை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் அனுமதியின்றி வந்த நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போலீசாரிடம் மனு கொடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வி விசாரணை நடத்தி நடிகர்களை தடைசெய்யப்பட்ட பேரிஜம் ஏரி பகுதிக்கு அழைத்துச்சென்ற வனத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுற்றுச்சூழல் காவலர்கள் சைமன், அருண், செல்வம் ஆகிய 3 பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

நடிகர்கள் ஏரிக்கு செல்ல காரணமான வனத்துறை அதிகாரிகள் குறித்தும், நடிகர்களுடன் வந்த மேலும் 2 பேர் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

இதனிடையே கொடைக்கானல் நகருக்கு நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் இ-பாஸ் இல்லாமல் உள்ளூர் நபர் உதவியுடன் வந்துள்ளதாக ஆர்.டி.ஓ. சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நடிகர்கள் விமல், சூரி உள்பட இயக்குனர்கள் அனைவரும் இ-பாஸ் இல்லாமல் கடந்த 15-ந்தேதி கொடைக்கானல் வந்து உள்ளனர். உள்ளூர் நபர் ஒருவர் உதவியுடன் அவர்கள் கொடைக்கானலில் தங்கியிருந்து பின்னர் பேரிஜம் ஏரிப்பகுதிக்கு சென்று மீன் பிடித்து உள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் கொடைக்கானலுக்கு வந்தது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் நடிகர்கள் பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், தொற்றுநோய் பரவும் சட்டம் ஆகியவற்றை மீறி கொடைக்கானலுக்கு வந்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்