தனியார் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மர வேலைக்குரிய எந்திரங்களை வாங்கி மோசடி - 2 பேர் மீது வழக்கு
தனியார் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மர வேலைக்குரிய எந்திரங்களை வாங்கி மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலையை சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவர் மர வேலைகள் சம்பந்தப்பட்ட தொழில் செய்து வருகிறார். இதனால் மர வேலைக்குரிய எந்திரங்களை வாங்குவதற்காக கல்யாணி டிரேடர்ஸ் என்ற பெயரில் 25.4.2014-ல் திருக்கோவிலூர் வணிகவரி அலுவலகத்தில் பதிவு செய்து பிணையாக தனது காலி வீட்டுமனை பத்திரத்தை கொடுத்து டின் எண்ணை பெற்று தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த நாராயணன், கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து கோபாலுக்கு தெரிவிக்காமலும், அவருடைய அனுமதியின்றியும் அவருடைய நிறுவனத்தின் பெயர் மற்றும் டின் எண்ணை பயன்படுத்தி சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் மர வேலைகளுக்கு தேவையான ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான எந்திரங்களை வாங்கியுள்ளனர்.
இதனிடையே கோபால், தனது நிறுவனத்தின் பெயரில் எந்தவித வியாபாரமும் செய்யாத காரணத்தினால் வணிக வரி அலுவலகத்தில் விற்பனை வரி ஏதும் தாக்கல் செய்யாமல் இருந்து வந்துள்ளார். ஆனால் வணிக வரி அலுவலகத்தில் இருந்து நாராயணன், கிருஷ்ணன் வாங்கிய எந்திரங்களுக்குரிய விற்பனை வரியான ரூ.89,295-ம், அதற்கான தண்டத்தொகையாக ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 942-ம் செலுத்த வேண்டும் என்று கோபாலுக்கு வணிக வரி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு நோட்டீசு அனுப்பினர்.
இதனை பெற்ற கோபால், உரிய விளக்கம் அளித்த பின்னரும் தற்போது வரி நிலுவைத்தொகையாக ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 867-ஐ செலுத்த வேண்டும் என்றும் தவறினால் அலுவலகத்தில் பதிவு செய்தபோது பிணையாக தாக்கல் செய்த சொத்து ஏலம் விடப்படும் என்று வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து கோபால், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது நிறுவனத்தின் பெயரையும், டின் எண்ணையும் தவறாக பயன்படுத்தி ஏமாற்றிய நாராயணன், கிருஷ்ணன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் நாராயணன், கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.