அரியானாவில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கன்டெய்னர் லாரியில் கடத்திய 59 எருமை மாடுகள் மீட்பு

அரியானாவில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கன்டெய்னர் லாரியில் கடத்திய 59 எருமை மாடுகளை போலீசார் மீட்டனர். மேலும் 3 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-07-24 22:00 GMT
மங்களூரு,

உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் அருகே கோட்டா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சாயபர் கட்டே பகுதியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக அரியானா பதிவெண் கொண்ட ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அந்த லாரியில் எருமை மாடுகளை இறைச்சிக்காக கடத்தியது தெரியவந்தது. மேலும் ஒரே கன்டெய்னரில் 59 எருமை மாடுகளை கொடுமைப்படுத்தி அடைத்து வைத்து கடத்தி வரப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதைதொடர்ந்து 59 எருமை மாடுகளை போலீசார் மீட்டனர். கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். அத்துடன் லாரியின் டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட எருமை மாடுகள் அனைத்தும் அரசின் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சந்தோஷ், கோட்டா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபா, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரியானாவில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக இறைச்சிக்காக கன்டெய்னர் லாரியில் அடைத்துவைத்து எருமை மாடுகளை கடத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கடத்தலின் பின்னணியில் யார்-யார் உள்ளனர் என்பது பற்றி போலீசார் துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்