பல்லடத்தில், கொரோனா ஊரடங்கால் கறிக்கோழி விற்பனை பாதிப்பு - உற்பத்தியை குறைத்த பண்ணையாளர்கள்

பல்லடத்தில் கொரோனா ஊரடங்கால் கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்கள் உற்பத்தியை குறைத்தனர்.

Update: 2020-07-24 06:15 GMT
பல்லடம், 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினமும் உச்சத்தை தொட்டு வருவதால் அரசு ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதன்படி ஞாயிற்றுக்கிழமைகள் ஊரடங்கு நீடிப்பதால், பொதுமக்கள் கடைகளுக்குச் செல்ல முடியாததால் கறிக்கோழி விற்பனை சுமார் 30 சதவீதம் குறைவு ஏற்பட்டிருப்பதாக கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-

பல்லடம் சுற்றுவட்டாரபகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சோளம், ராகி, பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலாளர்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் கறிக்கோழி விற்பனை சுமார் 30 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் கறிக்கோழி உற்பத்தியை குறைத்துள்ளோம். வருகிற நாட்களில் நிலைமை சரியானதும் உற்பத்தியை அதிகரிக்கப்படும்.

மேலும் கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் கறிக்கோழி தொழில் சார்ந்த உற்பத்தியாளர்கள், மற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பவில்லை. தொழில்துறை பாதிப்பால் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளது. அதனால் கோழி இறைச்சி நுகர்வும் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால் பண்ணை கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. உற்பத்தியாளர்கள் போதிய வருவாயின்றி நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தொழில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமானால் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்க வேண்டும். அதுவரை கோழிப்பண்ணையாளர்களுக்கு வருமான வரியில் தளர்வு, வங்கி கடன் வட்டி செலுத்த சலுகை வழங்க வேண்டும். புதிதாக தொழில் தொடங்க 2, 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும்.

கறிக்கோழி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தற்போதைக்கு காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய நவீன இயந்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., வரியில் விலக்களிக்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள் உதவும் பட்சத்தில் கறிக்கோழி உற்பத்தி தொழில் சீரடையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்