திண்டுக்கல்லில், கொரோனா பயத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறி தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற தொழிலாளி கொரோனா பயத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகேயுள்ள மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 55). இவர் திண்டுக்கல்லில் ஒரு இரும்பு பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அழகர்சாமி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால், அழகர்சாமியிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் வரை கிடைக்கவில்லை. இதனால் அழகர்சாமி தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற பயத்தில் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், அரசு மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறி திருச்சி சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றார். பின்னர் அங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி, அமர்ந்து கொண்டு உயர்அழுத்த மின்கம்பியை பிடித்தார். அதில் உடலில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அழகர்சாமி பரிதாபமாக இறந்தார்.
அவருடைய உடல் டிரான்ஸ்பார்மரில் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டு இருந்த அழகர்சாமியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே நேற்று காலை அழகர்சாமியின் மருத்துவ பரிசோதனை முடிவு கிடைத்தது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. பரிசோதனை முடிவு வருவதற்குள் கொரோனா அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தியது. சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.