தேனி மாவட்டத்தில், டாக்டர் உள்பட மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி - நீதிபதி உள்பட 211 பேருக்கு பாதிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட டாக்டர் உள்பட மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நீதிபதி உள்பட 211 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

Update: 2020-07-24 04:54 GMT
தேனி, 

தேனி மாவட்டத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. அவர்களில் 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதற்கிடையே கம்பத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் 48 வயது டாக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் முதல் முறையாக டாக்டரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

அதேபோல், கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போடியை சேர்ந்த 60 வயது முதியவர் மற்றும் 75 வயது முதியவர், வடுகபட்டியை சேர்ந்த 71 வயது முதியவர் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், உத்தமபாளையம் கோர்ட்டில் பணியாற்றும் சார்பு நீதிபதி, கோர்ட்டு ஊழியர், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் 2 நர்சுகள், அங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலக உதவியாளர், குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சு, தேனி ஆயுதப்படை போலீஸ்காரர், சின்னமனூர் போலீஸ்காரர், கம்பம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு, சின்னமனூர் வனக்காப்பாளர், டி.சிந்தலைச்சேரி வங்கி அதிகாரி ஆகியோர் உள்பட 211 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதன்படி அதிகபட்சமாக கம்பம் ஒன்றியத்தில் 67 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனியில் 47 பேர், பெரியகுளத்தில் 31 பேர், போடியில் 27 பேர், சின்னமனூரில் 12 பேர், உத்தமபாளையத்தில் 21 பேர், ஆண்டிப்பட்டியில் 4 பேர், கடமலை-மயிலையில் 2 பேர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஒரே நாளில் 211 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 262 ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் 188 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. நேற்று பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதற்கிடையே காய்ச்சல் பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தமபாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, பூதிப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் ஆகிய 2 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரிழந்துள்ளனர். பரிசோதனை முடிவு வந்தால் தான் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா? என்பது தெரியவரும்.

மேலும் செய்திகள்