பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது - அக்காள் கணவர், தாய் உள்பட 7 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தாயார், அக்காள் கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2020-07-23 22:15 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமியை அவரது அக்காள் கணவர் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததால் அக்காள் கணவரே அவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்துள்ளார். இதற்கிடையே அக்காள் கணவருடன் தொடர்பு வைத்திருப்பதை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி அந்த பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள் சிறுமியை பாலியல் பலாத்கார ம் செய்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் அக்காள் கணவர், மற்றும் 5 வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சிறுமியை அக்காள் கணவருக்கு திருமணம் செய்து வைக்க உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் மீது குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்