மரித்துப்போகாத மனிதநேயம்: சாலையோரம் அனாதையாக விடப்பட்ட மூதாட்டி உணவு கொடுத்து பராமரிக்கும் கிராம மக்கள்

திருக்கனூர் அருகே சாலையோரம் அனாதையாக விடப்பட்ட மூதாட்டிக்கு உணவு கொடுத்து கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர். இந்த சம்பவம் இன்னும் மனிதநேயம் மரித்துப்போகவில்லை என்பதை உணர்த்துகிறது.;

Update: 2020-07-23 23:52 GMT
திருக்கனூர்,

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே கொ.மணவெளியில் வீரன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இங்குள்ள புளியமரத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அதரவற்ற நிலையில் கிடந்தார். அவர் உணவு எதுவும் சாப்பிடாததால் மிகவும் சோர்வாக, சுயநினைவின்றி காணப்பட்டார்.

இதைப்பார்த்த கிராம மக்கள், மூதாட்டி மீது பரிதாபப்பட்டு உணவு மற்றும் குடிநீர் கொடுத்து மனித நேயத்துடன் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த மூதாட்டி சுயநினைவுக்கு திரும்பினார். அவரிடம், நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்று கிராம மக்கள் கேட்டனர். அதற்கு, அந்த மூதாட்டி, தான், முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அர்ச்சுனன் என்பவரின் மனைவி சின்னப்பொண்ணு என்றும், 2 மகன்கள், 5 மகள்கள் என 7 பிள்ளைகள் உள்ளனர். மகன்களின் பராமரிப்பில் இருந்து வந்தேன். இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்பது தெரியவில்லை என்றார்.

வயது முதிர்வு காரணமாக மூதாட்டியை பராமரிக்க முடியாமல் அவருடைய குடும்பத்தினர் இரவோடு இரவாக சாலையோரம் விட்டுச்சென்றார்களா? அல்லது உறவினர் வீட்டுக்குச் செல்லும் வழியில் மூதாட்டி வழிதவறி இங்கு வந்தாரா? என்பது தெரியவில்லை. அவருடைய குடும்பத்தினர், உறவினர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் மூதாட்டியை சேர்த்து வைக்க போலீசார், சமூக நல அமைப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதரவற்ற நிலையில் கிடந்த மூதாட்டியை உணவு கொடுத்து கிராம மக்கள் பராமரித்ததன் மூலம் மனிதநேயம் இன்னும் மரித்துப்போகவில்லை என்பதைத் தான் உணர்த்தியது.

மேலும் செய்திகள்