மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினம்: நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் அஞ்சலி

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி நேற்று தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2020-07-23 22:30 GMT
நெல்லை,

நெல்லையில் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசார் தடியடி நடத்தியதில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.

இதையொட்டி ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். எஸ்.சி. அணி மாவட்ட தலைவர் வைரமுத்து, செயலாளர் முத்துபலவேசம், வக்கீல் அணி கார்த்திகேயன், முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் நெல்லையப்பன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், செயலாளர் நாகராஜ சோழன், இணை செயலாளர் துரை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் உயிர் நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கருப்பந்துறை நினைவிடத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் விமல் வெஸ்கானியா, எம்.சி.சேகர், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் வியனரசு தலைமையில் அகரத் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் குயிலி நாச்சியார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச் செயலாளர் செல்லையா, கொள்கை பரப்பு செயலாளர் பாலமுருகன், தச்சநல்லூர் நகர செயலாளர் தங்கவேலு, மானூர் ஒன்றிய செயலாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திராவிட தமிழர் கட்சி பொதுச் செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 17 பேருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வேல்முருகன், தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் விட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா ஊரடங்கால் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு போலீசார் தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கட்சி, இயக்கம் சார்பில் 5 பேருக்கு மேல் வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் ஊர்்வலமாக வரவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. உள்ளூர் நிர்வாகிகள் மட்டும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியையொட்டி நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் குறிப்பிட்ட போலீசார் வெள்ளை நிற பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றுக்குள் யாரும் தவறி விழுந்தால் மீட்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் ஆற்றுக்குள் படகுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்