பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளரூபாய் நோட்டை மாற்ற முயற்சி 7 பேர் கைது

பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-23 21:30 GMT
பாவூர்சத்திரம்,

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை ஊரைச் சேர்ந்த துரைராஜ் (வயது 41) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த கடையில் நேற்று முன்தினம் 7 பேர் வந்து தனித்தனியாக 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது கேட்டுள்ளனர். அந்த நோட்டுகளை வாங்கிப் பார்த்தபோது துரைராஜ்க்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் இதுபற்றி உடனடியாக அவர் பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அவர்கள் 7 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில், கீழப்பாவூரை சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் என்ற துரைப்பாண்டி (38), சின்னத்தம்பி (32), வடலூரைச் சேர்ந்த கடல் மணி என்ற கடற்கரை (44), சிவலார்குளத்தை சேர்ந்த செல்வகுமார் (39), லட்சுமியூரை சேர்ந்த ரஞ்சித்குமார் (29), வட்டாலூரை சேர்ந்த பார்த்திபன் (21), கழுநீர்குளத்தை சேர்ந்த வேலு (37) ஆகியோர் என்பதும், அவர்கள் வைத்திருந்தது கள்ளரூபாய் நோட்டுகள் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 நூறு ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்