கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேச்சு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2020-07-23 22:45 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் துணை போலீஸ் சரகம் சார்பில், திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் சந்திப்பில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து பொதுமக்கள், வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியே வருகிற அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை தினமும் குடிக்க வேண்டும். இஞ்சி, மிளகு, மஞ்சள், வேப்பிலை கலந்து கசாயம் செய்தும் அருந்தலாம். நாட்டு மருந்து மூலமும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் வியாபாரிகள் அறிவுறுத்த வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துராமன், ரஞ்சித்குமார், ராதிகா, சாந்தி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்