ஒரே நாளில் 184 பேருக்கு தொற்று குமரியில் புதிய உச்சம் தொட்டது கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது
குமரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் குமரி மாவட்டத்தில் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. ஒருபுறம் தொற்று பரவலால் மக்கள் பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொருபுறம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தடுப்பு பணியில் ஈடுபடக்கூடிய போலீசார், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் வரையில் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 2 ஆயிரத்து 885 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 21 பேர் பலியாகி இருந்தார்கள்.
இந்தநிலையில் நேற்றும் குமரி மாவட்ட கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியது. அதாவது நேற்று இரவு வரையில் ஒரே நாளில் 184 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 95 பேரும், பெண்கள் 83 பேரும், சிறுவர்கள் 6 பேரும் அடங்குவர். அவர்களில் பெரும்பாலானோர் புதுக்கடை, வியன்னூர், கருங்கல், நாகர்கோவில் கோட்டார், வடசேரி, வடிவீஸ்வரம், கிருஷ்ணன்கோவில், அறுகுவிளை, பெருவிளை, குளச்சல், நட்டாலம், ஆலங்கோடு, புத்தேரி, குழித்துறை, மாராயபுரம், வள்ளவிளை, மணிக்கட்டிபொட்டல், ரீத்தாபுரம், தெருவுக்கடை, முட்டம், பூதப்பாண்டி, எட்டாமடை, தக்கலை, அகஸ்தீஸ்வரம், லாயம், ஆரல்வாய்மொழி, திட்டுவிளை, திருவிதாங்கோடு, இரணியல், நெய்யூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. அதாவது 3 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது.