டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - தஞ்சை மாவட்டத்தில், 400 லாரிகள் ஓடவில்லை
டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி லாரி உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை மாவட்டத்தில் நேற்று 400 லாரிகள் ஓடவில்லை.;
தஞ்சாவூர்,
டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை குட்ஷெட் பகுதியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் நேற்று ஓடவில்லை. இதையடுத்து லாரிகள் தஞ்சை விமானப்படை நிலையம் அருகே உள்ள லாரிகள் நிறுத்துமிடம் மற்றும் குட்ஷெட் பகுதியில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
தஞ்சை குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில் செயலாளர் கந்தசாமி, துணைத்தலைவர் சுரேஷ்குமார், துணை செயலாளர் வள்ளியப்பன், பொருளாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் தஞ்சை குட்ஷெட் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஓடாத லாரிகளுக்கு சாலைவரியை கட்ட சொல்வதை கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தினால் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்வது உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.