தானே நவ்பாடாவில் கொரோனா சிகிச்சை மருந்தை அதிக விலைக்கு விற்க முயன்ற 5 பேர் கைது

தானே நவ்பாடாவில் கொரோனா சிகிச்சை மருந்தை அதிகவிலைக்கு விற்க முயன்ற மேலும் 5 பேர் சிக்கினர்.

Update: 2020-07-22 22:10 GMT
தானே,

உலகநாடுகளில் ஆக்கிரமித்து வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா சிகிச்சைக்கு வெவ்வேறு மருந்துகளை டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டிலேயே இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் ரெம்டெசிவர் மற்றும் டோக்லிஜூமப் என்ற ஊசி மருந்துகளை சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தானே நவ்பாடா பகுதியில் கள்ளச்சந்தையில் அதிகவிலைக்கு ஊசி மருந்தை விற்க குமபல் வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்குள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதில் கொரோனாவிற்கான சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 2 மருந்து பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அந்த ஊசி மருந்துகளை கள்ளச்சந்தையில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையில் விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் இதில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்டவர்கள் காட்கோபரை சேர்ந்த அருண் ராம்சிங்(வயது35), கார் பகுதியை சேர்ந்த சுதாகர் சோபின் கிரி(36), நவிமும்பை கோபர்கைர்னேயை சேர்ந்த ரவீந்திரா மோகன் ஷிண்டே(36), நசீம் அகமது (32), நிர்மல் தாஸ்(39) என்பது தெரியவந்தது.

ஏற்கனவே இதேபோல் மருந்தை கள்ள சந்தையில் விற்க முயன்ற மும்பையை சேர்ந்த 7 பேர் பிடிபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்