மும்பையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது மாநகராட்சி தகவல்

மும்பையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது என்று மாநகராட்சி கூடுதல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-22 22:04 GMT
மும்பை,

நாட்டின் மற்ற நகரங்களை விட மும்பை தான் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்றுமுன்தினம் வரையிலான நிலவரப்படி கொரோனாவால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 262 பேர் பாதிக்கப்பட்டு, 5 ஆயிரத்து 814 பேர் உயிரிழந்து இருந்தனர்.

இந்தநிலையில், மும்பையில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இது குறித்து மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககானி கூறியதாவது:-

மும்பையில் கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு 1,500-க்கும் குறைவாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து, குடிசை பகுதிகளில் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தியது, அங்குள்ள கழிப்பறைகளை அடிக்கடி சுத்தம் செய்தது, வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தியது, மருத்துவ வசதிகளை வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம், தூய்மை, சமூக விலகல், முககவசம் அணிய வேண்டியதன் அவசியம், லிப்டுகள், படிக்கட்டுகள், கழிவறைகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது.

முககவசம் அணியாமல் வரும் வெளியாட்களை வீட்டு வசதி சங்கங்கள் தங்கள் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்க கூடாது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் நுழைவு வாயிலில் உடல்வெப்ப பரிசோதனை, கைகளை கழுவ கிருமிநாசினி ஏற்பாடு செய்யவேண்டும். மக்கள் வீடுகளில் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை மிக எளிமையாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்