ஊட்டி சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம் - படுக்கை வசதி இல்லை என புகார்
படுக்கை வசதிகள் இல்லை என்று கூறி தெரிவித்து ஊட்டி கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊட்டி அருகே மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளி மற்றும் கேத்தியில் உள்ள தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த 2 பள்ளிகளும் கேத்தி பேரூராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. லாரன்ஸ் பள்ளியில் 87 பேர், தனியார் பள்ளியில் 25 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் லாரன்ஸ் பள்ளி கொரோனா சிகிச்சை மையத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், படுக்கை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும் கூறி திடீரென கொரோனா நோயாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பெண்கள் பேசும் போது, கொரோனா சிகிச்சை மையத்துக்கு வந்து 3 நாட்கள் ஆகிறது. எங்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் வரவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்படவில்லை.
தண்ணீர் மற்றும் சாப்பாடு இல்லாமல் இருந்தோம். இதுகுறித்து தெரிவித்த பின்னர்தான் கிடைத்தது. படுக்கை மற்றும் தலையணை, குளிரை தாங்க கம்பளி இல்லை. இதனால் நாங்கள் குளிரால் அவதிப்பட்டு வருகிறோம். குளிப்பதற்கு கூட சூடு தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் வீடுகளில் இருந்ததை விட இங்கு வந்த பின்னர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம். வீட்டில் தனிமையில் இருந்து நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்கிறோம் என்றனர். அந்த மையத்தில் சிறுமிகள், 2 கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள் உள்ளனர் என்றனர்.
இந்த புகார் எழுந்ததை அடுத்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா லாரன்ஸ் பள்ளியில் தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும், போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும், கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நோயாளிகளுக்கு 90 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும், சூடு தண்ணீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.