நீலகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா - போலீஸ் குடியிருப்புக்கு சீல்

நீலகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. போலீஸ் குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2020-07-21 22:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு நோயாளியின் பெயர் நீலகிரி மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கூடலூர் நந்தட்டியை சேர்ந்த 30 வயதான பெண், 31 வயதான ஆண் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் துபாயிலிருந்து வந்தனர். அவர்கள் மீண்டும் துபாய் செல்வதற்காக பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று உறுதியானது. அவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த பின்பு வெளியூர் சென்று வந்து உள்ளனர். இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு 516 உயர்ந்து உள்ளது. இதில் 277 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 237 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. அவர் ஏற்கனவே கொரோனா பாதித்த கடநாடு கிராமத்தில் இருந்து பணிக்கு வந்து சென்றது தெரியவந்தது. தொற்று பரவலை தடுப்பதற்காக ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையம் மேல் பகுதியில் போலீஸ் குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பாதித்த அரசு பெண் ஊழியர்கள் 2 பேருடன் தொடர்பில் இருந்த ஒருவரிடமிருந்து மாதிரி எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்