மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் 150 பேர் குண்டர் சட்டத்தில் கைது - போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நடவடிக்கையால் கடந்த ஓராண்டில் மட்டும் 150 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஸ்ரீஅபிநவ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தில் பல்வேறு குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கொலை, வழிப்பறி, திருட்டு, மணல் கடத்தல், மதுகடத்தல் மற்றும் விற்பனை, லாட்டரி, போதை பொருட்கள் விற்பனை, பாலியல் தொல்லை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த சிதம்பரம் அய்யர் என்கிற பாபு, புவனகிரி ரித்திக் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அந்தமானில் பதுங்கி இருந்த ரித்திக்கை, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையிலான தனிப்படையினர் அந்தமானுக்கே சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதுதவிர சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீது திராவகம் ஊற்றிய வழக்கில் கைதான குற்றாலம் முத்தமிழன், பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்ட குண்டலபாடி முக்குட்டு முருகன், நெய்வேலி முனுசாமி, நடராஜன் உள்ளிட்ட 62 பேரும். கடலூர் நகரில் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நெய்வேலி சின்னகாப்பான்குளம் சிவராமன், காடுவெட்டி செல்வமணி, விக்கி, நாகர்கோவில் ராபின்குமார், ஈரோடு சின்னசமுத்திரம் சண்முகம், விழுப்புரம் மணிகண்டன், சங்கராபுரம் ஏழுமலை உள்ளிட்ட 21 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேலும் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட புதுச்சேரி மாநிலம் குருவிநத்தம் கலைமணி, மாவெட்டிபாளையம் விலாங்கு என்கிற நடராஜன் உள்ளிட்ட 38 பேர் மீதும், லாட்டரி விற்பனை வழக்கில் கைதான 4 பேர், மணல் கடத்தலில் கைது செய்யப்பட்ட 12 பேர், பாலியல் பலாத்கார வழக்கில் பிடிபட்ட 8 பேர், போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக பிடிபட்ட 5 பேர் என மாவட்டம் முழுவதும் 150 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.