புதுவை பட்ஜெட் செல்லுபடியாகுமா? ஆட்டிப்படைக்கும் அதிகாரப் போட்டியால் பரபரப்பு

புதுச்சேரி அரசியல் என்றாலே பரபரப்புக்கு ஒரு போதும் பஞ்சம் இருக்காது.

Update: 2020-07-21 23:29 GMT
புதுச்சேரி ,

யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்துக்குட்பட்டது. அதன்படி சகல அதிகாரங்களுடன் கவர்னரும் நியமிக்கப்பட்டு வருகிறார். மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர்கள் சில நேரங்களில் மாநில அரசின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது காலங்காலமாக நடந்து வருகிறது.

கடந்த கால என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கூட கவர்னராக இருந்த வீரேந்திர கட்டாரியா சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் நேரடியாக தலையிட்டார். அந்த காலகட்டத்தில் அவரது நேரடி தலையீட்டின் காரணமாக ஓரளவு ரவுடிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.

அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது. அதே ஆண்டில் கவர்னராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பெடி நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே சுமூக போக்கு இருந்தாலும் பின்னர் பனிப்போர் வெடித்தது. குறிப்பாக கவர்னருக்கு அதிகாரமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா? என பட்டிமன்ற தலைப்பாகவே மாறி மோதல் இருந்து வருகிறது.

கவர்னருக்கு எதிராக அமைச்சரவை மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை முன்பு 6 நாள் தர்ணா போராட்டம் நடத்திய வரலாறும் இங்கு உண்டு. அதேபோல் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் முன் எப்போதும் இல்லாத வகையில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்களுக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல், கவர்னரே பதவி பிரமாணம் செய்து வைத்ததும் அரங்கேறியது.

அவர்களை சட்டமன்றத்தில் அனுமதிக்க அப்போது சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் அனுமதிக்கவில்லை. அதையடுத்து நியமன எம்.எல்.ஏ.கள் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடி சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். இவ்வாறாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் மற்றும் மாநில அமைச்சரவை இடையேயான அதிகாரப்போட்டி தொடர் கதையாகி வருகிறது. நீதிமன்றங்களிலும் இது தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் தங்களுக்கு சாதகமாகவே அந்த தீர்ப்புகள் உள்ளன என்று அவற்றில் உள்ள சாதக பாதகங்களை எடுத்து செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் மக்கள் நலத்திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகை ஆகாது. பட்ஜெட் என்ற போர்வையில் மோதல் போக்கு முற்றி மாநிலம் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி என்பது கட்டாயம் தேவை. 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ரூ.9 ஆயிரத்து 500 கோடியில் மாநில அரசு தயாரித்து கவர்னர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் மத்திய அரசு கொரோனாவினால் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளதால் பட்ஜெட் தொகையை குறைக்குமாறு கூறியது. அதன்பின் ரூ.9 ஆயிரம் கோடிக்கு தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கடந்த 20-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் தாக்கல் தான் தற்போது புதுவை அரசில் பூதாகரமாக வெடித்து உள்ளது. மாநில நிர்வாகி தன்னிடம் ஒப்புதல் பெறாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி குற்றம் சாட்டியுள்ளார். பட்ஜெட்டுக்கு தன்னிடம் ஒப்புதல் பெறாதது கவர்னர் உரையை முன்கூட்டியே அனுப்பாதது ஆகிய காரணங்களைக் கூறி கடந்த 20-ந் தேதி திட்டமிடப்பட்டிருந்த கவர்னர் உரையை நிகழ்த்த சட்டமன்றத்திற்கு வராமல் கவர்னர் கிரண்பெடி புறக்கணித்து விட்டார்.

இதற்கிடையே அன்றைய தினமே முதலமைச்சர் நாராயணசாமி ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் கவர்னரும், முதல்-அமைச்சரும் கடிதப் போரே நடத்தி முடித்துள்ளனர். இதுகுறித்து மத்திய உள்துறையிடம் கவர்னர் கிரண்பெடி புகார் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் இவ்வாறு இருக்க அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் சட்ட விதிகளின்படி பட்ஜெட் கோப்புகள் எனக்கு அனுப்பப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கான சம்பளம், செலவு, ஓய்வூதியம் போன்றவை அடுத்த மாதம் முதல் பாதிக்கப்படும். கவர்னர் தாமதப்படுத்தியதாக முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ குற்றம் சாட்டினால் அது தவறானது என்று குறிப்பிட்டிருந்தார்.

கவர்னரின் இந்த கருத்துக்கள் தான் இப்போது புதுவை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா? முதியோர், ஊனமுற்றோர், விதவைகள் என சுமார் 2 லட்சம் குடும்பங்கள் அரசின் உதவித் தொகையை எதிர்பார்த்து உள்ளன. இதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே சட்டசபையில் கவர்னர் உரையாற்ற வராத நிலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் செல்லுபடியாகுமா? இல்லையா? என்ற விவாதம் பொதுமக்கள் மத்தியில் நடந்து வருகிறது.

இது தொடர்பாக முன்னாள் பட்ஜெட் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடந்த காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏதும் வந்தது கிடையாது. நடத்தை விதி எண் 27-ன் படி மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முன்பு அதற்கு கவர்னரின் ஒப்புதலை பெறவேண்டும். ஆனால் புதுவை சட்டசபையில் இதுவரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் என்பது நடத்தப்படவில்லை. அதேசமயம் முன்பெல்லாம் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் தொடர்பான கோப்புகளை தனித்தனியே தயார் செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி விடுவோம்.

ஆனால் இப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்து அதன் பின்னரே மானிய கோரிக்கைகள் தொடர்பான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்கு கடந்த 4 ஆண்டுகளாக அனுப்பப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். அதில் ஒன்றும் தவறு இல்லை.

பட்ஜெட் என்பது கவர்னரின் ஒப்புதலுக்கு பின்னரே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படுகிறது. அதன் பின்பு கவர்னருக்கு பட்ஜெட்டை அனுப்ப வேண்டியது இல்லை. ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யலாம். இந்த பட்ஜெட்டிலேயே ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்பாக கண்டிப்பாக அதற்கு கவர்னரின் அனுமதியை பெற வேண்டும். அதுதான் நமது சட்டசபை நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

புதுச்சேரியை சேர்ந்த மூத்த வக்கீல் ஒருவர் கூறியதாவது:-
அமைச்சரவையில் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் கவர்னரின் செயலாளரும் கலந்து கொள்வார்கள். கவர்னரின் செயலாளர் என்பவர் கவர்னரின் பிரதிநிதியாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனால் பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் கவர்னருக்கு தெரியும். மேலும் பட்ஜெட் கவர்னரின் ஒப்புதலின் பேரிலேயே ஜனாதிபதிக்கு அனுப்பப்படுகிறது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் சட்டசபையில் தாக்கல் செய்யலாம்.

அதனை மீண்டும் கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என்பதில்லை. கவர்னர் உரையும் அமைச்சரவை கூட்டத்தில் தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்படுகிறது. அதனை கவர்னர் சட்டமன்றத்தில் வாசிப்பார். அதேபோல் பட்ஜெட் உரையை கவர்னர் பார்க்க வேண்டும் என்பது சட்டத்தில் கிடையாது. பட்ஜெட் என்பது முழுக்க முழுக்க அமைச்சரவை சம்பந்தப்பட்டது. அந்த பட்ஜெட் உரையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு எம்.எல்.ஏ.க்கள் அதுதொடர்பாக விவாதித்து அதன் பின்னர்தான் மாற்றம் செய்ய முடியும். மானிய கோரிக்கைகள் தொடர்பான கோப்புக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்யலாமே தவிர அதை நிராகரிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதுவை அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி கூறியதாவது:-

புதுவை யூனியன் பிரதேசம் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு துறை தான். புதுவை பட்ஜெட்டுக்கு சட்டவிதி 309-ன் படி ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்து உள்ளார். புதுவை யூனியன் பிரதேசத்தில் மட்டும் உருவாக்கப்பட்ட அரசின் நிர்வாக சட்டம் 240-ன் படி நல்ல நிர்வாகம், வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவை அமைச்சரவையே சாரும். இங்கு அமைச்சரவை இல்லாதபோது அது மத்திய அரசின் கைகளுக்குப்போய் விடும். நிர்வாகத்தில் குறைபாடு இருந்தால் அதை சுட்டிக்காட்டி திருத்தலாம்.

கவர்னர் அமைச்சரவை இடையே ஆன மோதலில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அரசியல் அமைப்பு சட்டம் 370-வது பிரிவின் படி சம்பளம் தராமல் நிதி அவசர சட்டத்தை அமலாக்க கவர்னர் முயற்சிக்கிறார் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. புதுவை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், மத்திய அரசு மற்றும் மாநில அரசு தொகுப்பு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது புதுவை பட்ஜெட் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதையும் மீறி கவர்னர் ஏதாவது செய்தால் உள்துறை அமைச்சகம் தான் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். ஏனெனில் அரசாங்கமும் அரசு ஊழியர்களும் வேறு வேறானவர்கள் அல்ல. இவ்வாறு லட்சுமணசாமி கூறினார்.

மானிய கோரிக்கைக்கு கவர்னர் ஒப்புதல் தராவிட்டால்
அரசு நிலைகுலைந்து போகும்
முன்னாள் எம்.பி. ராமதாஸ் கருத்து
புதுவை அ.தி.மு.க. இணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இன்றைய சூழ்நிலைக்கு பயனுள்ளதா? பயனற்றதா? என்று விமர்சிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்தப்படுமா? அல்லது அப்படியே நிறுத்தி வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த பட்ஜெட் சட்ட சிக்கல்களில் மாட்டி அதனால் ஒரு பெரிய நிதி சிக்கல் உருவாக இருப்பதாகவே தோன்றுகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு பட்ஜெட் எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்பதை 1963-ம் ஆண்டின் சட்ட விதிகள் வரையறுக்கின்றன. அதன்படி செயல்பட முதல்-அமைச்சர் தவறிவிட்டார்.

கவர்னர் உரை இல்லாமல் முதல்-அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தது துரதிருஷ்டவசமானது. இந்திய வரலாற்றில் எந்த மாநிலத்திலும் நடந்திராத நிகழ்வாக உள்ளது. கவர்னர் வராத நிலையில் கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு ஒத்தி வைத்திருக்கவேண்டும். ஆனால் சட்டமன்ற விதியை பயன்படுத்தி கவர்னர் உரையை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது சரியில்லை. ஒவ்வொரு அரசு துறைக்கும் செலவு செய்யப்பட இருக்கும் மானிய கோரிக்கைகள் எப்படி சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பதை பற்றி விதிஎண் 28 கூறுகிறது. இந்த பட்ஜெட்டுக்கும், மானிய கோரிக்கைகளுக்கும் நிர்வாகி (கவர்னர்) ஒப்புதல் கொடுக்க மறுத்தாலோ அல்லது ஜனாதிபதியின் கருத்துக்கு அனுப்பி வைத்தாலோ அரசு எந்த செலவையும் செய்ய முடியாமல் நிலைகுலைந்துபோகும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்