கொரோனாவை தடுக்க இனிவரும் நாட்களில் கர்நாடகத்தில் ஊரடங்கு கிடையாது முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க இனி வரும் நாட்களில் கர்நாடகத்தில் எந்த பகுதியிலும் ஊரடங்கு கிடையாது என்றும், அனைவரும் அரசின் உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Update: 2020-07-21 23:15 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு 67 ஆயிரத்தை தாண்டிவிட்டது. பலி 1,500-ஐ நெருங்கியுள்ளது. இதில் மாநில தலைநகரான பெங்களூருவில் மட்டும் 33 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும், பலியும் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர்.

இதனால் பெங்களூருவில் ஒரு வார ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மேலும் தட்சிணகன்னடா, தார்வார், கலபுரகி உள்பட சில மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மாலை 5 மணியளவில் சமூக வலைதளங்களில் வீடியோ மூலமாக மாநில மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பற்றி தான் மக்கள் பேசுகின்றனர். கர்நாடகத்தில் ஆரம்பத்தில் மற்ற மாநிலங்களை விட கொரோனா பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றே தீர்வு இல்லை. மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம். கொரோனா தடுப்பு பணியில் டாக்டர்கள், நர்சுகள், ஆஷா திட்ட ஊழியர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர்.

எனவே கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசின் உத்தரவை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால் கொரோனா பாதிப்பு இல்லாத நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படும் நிலை மாறும். நோயாளிகள் அச்சப்பட வேண்டாம். கொரோனா பாதித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்த விதமான அறிகுறியும் இருப்பதில்லை. அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5 சதவீத பேர் மட்டுமே வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகளுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் 741 படுக்கை வசதிகளும், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் 819 படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனைகளில் 4,836 படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 2,624 படுக்கை வசதிகளும் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கவும் அரசு அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது. ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. ஒவ்வொரு வார்டு மற்றும் பூத் மட்டத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல, கொரோனா பரிசோதனை அறிக்கை வருவதற்கு காலதாமதம் ஆவதாகவும் குற்றச்சாட்டுகள் வந்தன. இனிமேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு 24 மணிநேரத்தில் அறிக்கை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அறிக்கை தாமதம் ஆவதை தவிர்ப்பதன் மூலம் கொரோனா பரவலையும் தடுக்க முடியும்.

கொரோனா பாதித்த 100 பேரில் 98 பேர் குணமடைந்து விடுகின்றனர். மீதியுள்ள 2 பேர் வயது மூப்பு, உடல் நலக்குறைவால் உயிர் இழக்கிறார்கள். கொரோனா பாதித்த யாரும் தங்களது உயிரை இழந்து விடுவதில்லை. எனவே கொரோனாவுக்கு பயந்து யாரும் தற்கொலை முடிவை மட்டும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஊரடங்கில் தளர்வு செய்த பின்பு மராட்டியம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்கு வருகை தந்தனர். பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும்.

மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கை வசதிகளை ஒதுக்குவதாக தனியார் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசுடன் கைகோர்த்து செயல்படும்படி தனியார் மருத்துவமனைகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 8 மண்டலங்களுக்கும் பொறுப்பு மந்திரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பரிசோதனையை அதிகரிக்கும்படியும், சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன்.

பெங்களூரு தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து கலெக்டர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறேன். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவித்துள்ளேன். ஊரடங்கு அவசியமில்லை என்றும் கலெக்டர்களிடம் அறிவுறுத்தி உள்ளேன். மாநிலத்தில் கொரோனா பரவும் இந்த சந்தர்ப்பத்தில் அரசுடன் கைகோர்த்து செயல்படும்படி எதிர்க்கட்சிகளிடமும் கேட்டுக் கொள்கிறேன். அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு பதிலாக கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆலோசனைகளை வழங்குங்கள்.

பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்திற்கு சென்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பார்வையிட்டுள்ளார். அங்கு கொரோனா பாதித்த 10,100 பேர் சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளன. அங்கு படுக்கைகள் உள்ளிட்டவை வாங்க ஒட்டு மொத்தமாக ரூ.11½ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பின்பு மெத்தைகள் தீவைத்து எரிக்கப்படும். மற்ற உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன்.

கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார். அதற்கு உரிய ஆவணங்களை உடனடியாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். உபகரணங்கள் வாங்கியதில் ஒரு ரூபாய் கூட முறைகேடு நடக்கவில்லை. மக்கள் சிரமப்படும் நேரத்தில் அரசின் மீது குற்றச்சாட்டு கூறுவதை தவிர்த்துவிட்டு கட்சி பேதங்களை மறந்து அரசுடன் கைகோர்த்து செயல்படும்படி எதிர்க்கட்சி தலைவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சால் மக்கள் பீதி அடைகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க தினமும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறேன். கொரோனா பரவலை தடுக்க என்னுடைய சக்தியை மீறி உழைத்து வருகிறேன். ஒருநாள் கூட நிம்மதியாக தூங்கியதில்லை.

மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா கட்டுப்படுத்த முடியும். பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் மக்கள் முக கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள், அரசின் உத்தரவை பின்பற்றுங்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இது முக்கியமானது என்பதால் திரும்ப திரும்ப சொல்கிறேன். 55 வயதுக்கு மேற்பட்டோர் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பெங்களூருவில் நாளை (அதாவது இன்று) அதிகாலை 5 மணியுடன் ஊரடங்கு நிறைவு பெறுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் எந்த பகுதியிலும் இனி ஊரடங்கு அமல்படுத்தப்படாது. ஊரடங்கால் மட்டும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியாது. அரசின் நிதி நிலையிலும் கவனம் செலுத்த வேண்டிய உள்ளது. மக்கள் எப்போதும் போல தங்களது பணிகளை மேற்கொள்ளலாம். அதே நேரத்தில் கொரோனா பாதித்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுடன் கைகோர்த்து செயல்படும்படி எதிர்க்கட்சிகள், மாநில மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்