நிபுணர்கள் எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காத அரசின் அலட்சியமே கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு

கொரோனா பரவல் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அரசின் அலட்சியமே தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2020-07-21 23:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு துமகூரு ரோட்டில் சர்வதேச கண்காட்சி மையத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 10,100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையத்திற்கு நேற்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் உள்ளிட்டவற்றை சித்தராமையா பார்வையிட்டார். பின்னர் அவர், ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசியாவிலேயே பெங்களூருவில் தான் 10,100 படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை அமைத்திருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறி வருகிறார். அதனால் இந்த மையத்தில் இருக்கும் மருத்துவ வசதிகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கு வந்தேன். அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை இந்த மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இங்கு போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதாக தெரியவில்லை. நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இல்லை. அந்த வசதிகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் பலியாகும் சம்பவங்கள் நடக்கிறது. கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். ஆனாலும் அரசு அலட்சியமாக இருந்த காரணத்தால் தற்போது கொரோனா பரவல் அதிவேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் நோயாளிகள் சரியான சிகிச்சை கிடைக்காமல் பலியாக வேண்டிய நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது.

மந்திரிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. கொரோனா தடுப்பு பணியை நிர்வகிக்கும் பொறுப்பு மந்திரிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மந்திரிகளின் அலட்சியம் காரணமாக அதிகாரிகளை சரியாக பயன்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. இனியும் அரசு எச்சரித்து கொள்ளாவிட்டால் கர்நாடகத்தை காப்பாற்ற முடியாது. இந்த மையத்தில் 10,100 படுக்கை வசதிகள் இருந்தால் டாக்டர்கள், நர்சுகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவையாகும். ஆனால் இதுவரை யாரையும் அரசு நியமிக்கவில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இதுபற்றி அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 3-ந் தேதி குற்றச்சாட்டு கூறினேன். 17 நாட்கள் கழித்து சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு விளக்கம் அளித்துள்ளார். முறையான ஆவணங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. இந்த முறைகேடு தொடர்பான மேலும் சில ஆவணங்களை கூடிய விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்