டாக்டர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்பட 93 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் டாக்டர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்பட 93 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-21 06:42 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,766 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 93 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர், மருந்தாளுனர் ஒருவர், கீரப்பாளையம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 2 செவிலியர்கள், ஒரு மருத்துவ பணியாளர், நெய்வேலியை சேர்ந்த ஒரு மருத்துவ பணியாளர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்த சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கும் நோய் தொற்று உறுதியானது. இதை அறிந்ததும் சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊழியர்கள் கலக்கம்

இதையடுத்து சுகாதார ஆய்வாளரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நோய் தொற்று ஏற்பட்டதால் மற்ற ஊழியர்களும் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இது தவிர சென்னையில் இருந்து பண்ருட்டி வந்த 2 பேர், சிதம்பரம் வந்த ஒருவர், தென்காசியில் இருந்து கடலூர் வந்த ஒருவர், மயிலாடுதுறையில் இருந்து கடலூர் வந்த 5 பேர், ஆந்திராவில் இருந்து நெய்வேலி வந்த 2 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடலூர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 22 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

7 கர்ப்பிணிகள்

பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி பகுதிகளை சேர்ந்த 7 கர்ப்பிணிகளுக்கும், கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 44 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்த விருத்தாசலம் மணலூரை சேர்ந்த 40 வயது ஆண் கடலூர் மாவட்ட இறப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனால் சாவு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் 1,390 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 346 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், விடுதிகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 105 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இது வரை 37 ஆயிரத்து 294 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில் 1,859 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 525 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 365 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்