மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.;

Update: 2020-07-19 22:15 GMT
திருவண்ணாமலை,

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடு விதிகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.

இந்த நிலையில் ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இந்த மாதத்துக்கான 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் அத்தியவாசிய பொருட்கள் வாங்க மக்கள் கடைவீதிகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

திருவண்ணாமலை நகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், டீக்கடைகள், சலூன்கடைகள், மொத்த காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு காணப்பட்டது. இருப்பினும் நேற்று மதியம் வரை சிலர் தங்களின் இருசக்கர வாகனங்களில் சாலையில் வலம் வந்தனர். பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் ஊரடங்கினால் இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அசைவம் சாப்பிட முடியாமல் அதிர்ப்தி அடைந்தனர். பெட்ரோல் நிலையங்களும் மூடப் பட்டதால் சிலர் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாமல் தவித்தனர். மருந்து கடைகள், மருத்துவ மனைகள் மட்டும் திறந் திருந்தது. பால் பூத்கள் திறக்கப் பட்டு காலை 10 மணிக்கு முன்பே மூடப்பட்டது.

திருவண்ணாமலை நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியிலும், வாகன சோதனை களிலும் ஈடுபட் டனர். ஊரங்கு காரணமாக திருவண் ணாமலை நகரமே மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டது.

ஆரணி நகரில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. போலீசார் நகரின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரணமின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய் தனர்.

அதேபோல் போளூர் பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் போளூர் நகரில் உள்ள எல்லா கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப் பட்டன. சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வெம்பாக்கம் தாலுகா தூசி மெயின் ரோடு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சிக்கன், மட்டன் இறைச்சி கடைகள் ஊரடங்கு மீறி செயல்பட்டது. இறைச்சி வாங்குபவர்கள் அவர்களின் வாகனங்களை ரோட்டிலே விட்டுவிட்டு கும்பலாக நின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்பென்னாத்தூரில் பால், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் ஊர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. டாஸ்மாக் கடை மற்றும் பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து அறவே இல்லாததால் திருவண் ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப் பட்டது.

கண்ணமங்கலம் பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்