கொரோனா காலத்தில் பட்டினிச்சாவு ஏற்பட்டால் கவர்னர் தான் காரணம் - அமைச்சர் கந்தசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
கொரோனா காலத்தில் பட்டினிச்சாவு ஏற்பட்டால் கவர்னர் தான் காரணம் என்று அமைச்சர் கந்தசாமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.
பாகூர்,
கிருமாம்பாக்கம் அரசு ஊழியர்கள் நல சங்கம் சார்பாக ஆங்கில திறனறிவு பயிற்சி தொடக்க விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அரசு ஊழியர்கள் நல சங்க தலைவர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு திறனறிவு பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை உதவி நூலக அதிகாரிகள் ஜெஸ்லின், கலியபெருமாள், கார்த்திகேயன், பழனிவேலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பல்வேறு திட்டங்களை உருவாக்கலாம். ஆனால், அந்த திட்டங்களை கொண்டு செல்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் ஊழியர்கள் வரை பணி செய்தல் தான் செயல்படுத்த முடியும். கொரோனா தொற்றின் பாதிப்பை விட வறுமைதான் மக்களை அதிகமாக பாதிக்கிறது.
மத்திய அரசு கொடுக்கின்ற அரிசியும், மாநில அரசு கொடுக்கின்ற நிதியும் மக்களுக்கு போதுமானதாக இருக்காது. மாநில அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது என்பதை அனைத்து மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் புதுச்சேரி மாநிலம் தவித்து வரும் நிலையில் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை.
பிரதமர் மோடி ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்று அறிவித்துள்ளார். ஆனால் நமது மாநிலத்தில் ரேஷன் கடையே இல்லாத நிலையை ஏற்படுத்தி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துவிட்டு கவர்னர் கிரண்பெடி பணமாக வழங்க முரண்பட்ட உத்தரவிட்டுள்ளார். இதனை மக்கள் தான் சிந்திக்கவேண்டும். இருக்கின்ற 6 மாதத்தில் திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
இந்த கொரோனா காலத்தில் பட்டினிச் சாவு ஏற்பட்டால், அதற்கு கவர்னர் தான் காரணம் என்பதை நான் தெளிவாக கூறமுடியும். அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யவில்லை என்று அதிகாரிகளை கேள்வி கேட்கும் கவர்னர், 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் இருக்கிறார்களே, அவர்களுக்கு நிதி வாங்கிக்கொடுத்தார்களா? மத்திய அரசிட மிருந்து நிதி பெற்று தொழிற்சாலைகளை நடத்துவதற்கு உதவி செய்தார்களா? சனிக்கிழமை தோறும் சைக்கிள் வந்தார்களே இப்போது எங்கே போனார்கள்? மக்களை எதற்காக நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு ஊழியர் நல சங்க அன்புமணி, சந்திரபாலன், ஆனந்தவேலு, அஞ்சாப்புலி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் விநாயகம் நன்றி கூறினார்.