பேட்டையில் பரபரப்பு: இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம்

பேட்டையில் பழ வியாபாரியுடன் ஏற்பட்ட தகராறு இருதரப்பினர் மோதலாக மாறியது. இதில் பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2020-07-19 22:45 GMT
பேட்டை, 

நெல்லை பேட்டை நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 25). இவர் மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு தெருவாக சென்று பழ வியாபாரம் செய்து வருகிறார். ஆபிரகாம் நேற்று முன்தினம் பேட்டை அசோகர் தெருவில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுக நயினார் (45), அவரது சகோதரர் மாரியப்பன் (48), மாரியப்பன் மகன் மாதவன் (21) ஆகியோர் சேர்ந்து பழத்தை குறைந்த விலைக்கு தருமாறு வற்புறுத்தினார்கள். மேலும் அவரை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆபிரகாம் பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் எங்களை பற்றி எப்படி போலீசில் புகார் தெரிவிக்கலாம்? என எதிர்ப்பு தெரிவித்து அசோகர் தெருவை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கல், கம்போடு நாராயண சுவாமி கோவில் தெருவிற்கு வந்தனர். இதனை அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்த செல்வரீகன் என்பவரின் மண்டை உடைந்தது. மேலும் அசோகர் தெருவை சேர்ந்த இசக்கி செல்வம் (30), முத்து லட்சுமி (30), மற்றொரு முத்துலட்சுமி (28) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பழ வியாபாரியுடன் ஏற்பட்ட தகராறு இருதரப்பினர் மோதலாக மாறிய சம்பவம் பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்