2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையம் மூடல்
2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.;
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மற்ற போலீஸ்காரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதார துறையினர், வடக்கு விஜயநாராயணம் ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து, மூடினார்கள். தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்கள், பெண் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இட்டமொழி அருகே உள்ள சங்கணாங்குளம் கிராமத்தில் ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்து, பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாங்குநேரி யூனியன் பனையன்குளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் வட்டார மருத்துவ அலுவலர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி முழுவதும் கிருமி நாசினி தெளித்தும், பிளச்சிங் பவுடர் தூவியும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த பரிசோதனை மையம், ஈ.சி.ஜி. அறை, எக்ஸ்ரே அறை, ஸ்கேன் அறை, வெளிநோயாளிகள் பிரிவு என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் கொரோனா பரிசோதனை மையம் அருகில் உள்ள பகுதியில் இயங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
சுரண்டையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த வாரம் 3 நாட்கள் முழு கடையடைப்பு நடந்தது. தொடர்ந்து மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருந்தன. இந்த நிலையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வாங்கி செல்ல வசதியாக இன்று (திங்கட்கிழமை) முதல் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளபடி தினமும் இரவு 8 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும். ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் நடராஜன், பொருளாளர் தனபால் ஆகியோர் தெரிவித்தனர்.