உடன்குடி அருகே, கார் மரத்தில் மோதி வாலிபர் சாவு

உடன்குடி அருகே கார் மரத்தில் மோதி விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-07-19 22:15 GMT
உடன்குடி, 

உடன்குடி நடுக்காலன்குடியிருப்பை சேர்ந்த லிங்கேஸ்வரன் மகன் கோபி(வயது 26). இவரும், தர்மராஜ் மகன் கோபாலகிருஷ்ணன்( 27), செல்வன் மகன் அருண்(27) ஆகியோரும் காரில் நேற்று பகல் 2 மணியளவில் காரில் நடுக்காலன்குடியிருப்பில் இருந்து உடன்குடி செட்டியாபத்து ரோட்டில் சென்றனர். கோபி காரை ஓட்டியுள்ளார். உடன்குடி அருகே திடீரென்று நிலைதடுமாறிய கார் ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. இதில் கோபி பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு கூக்குரல் எழுப்பினர். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் உள்ள குழுவினர் விரைந்து சென்று படுகாயங்களுடன் இருந்த கோபாலகிருஷ்ணன், அருண் ஆகிய 2பேரையும் மீட்டனர். அந்த 2 பேரும் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காருக்குள் பிணமாக கிடந்த கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குலசேகரன்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்துள்ள அருண் ரேஷன்கடை ஊழியராக இருந்து வருகிறார்.

மேலும் செய்திகள்