கோவையில் அடுத்தடுத்து சம்பவம்: 4 கோவில்கள் முன்பு டயர்களை தீவைத்து எரித்ததால் பரபரப்பு

கோவையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கோவில்கள் முன்பு டயர்களை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-07-19 04:48 GMT
கோவை,

கோவை டவுன்ஹால் என்.எச்.சாலை ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுத்தம் செய்ய பெண் ஒருவர் நேற்று அதிகாலை சென்றார். அவர், கோவில் முன்பு டயர்களை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் பெரியகடை வீதி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அங்கு பழைய டயர் மற்றும் பிளாஸ்டிக் பைப்புகளை போட்டு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து விட்டு சென்றது தெரிய வந்தது. மேலும் கோவிலில் இருந்த சூலம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

விநாயகர் கோவில்

அதுபோல் கோவை ரெயில் நிலையம் முன்பு உள்ள சிறிய விநாயகர் கோவில் முன்பும் டயர்களை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதுபோன்று கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு உள்ள விநாயகர் கோவில் முன்பும் டயர்களை போட்டு தீ வைத்து எரித்தது தெரியவந்தது. அங்கும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஊர்வலம்-பரபரப்பு

இதற்கிடையே, கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவில் முன்பும் டயர்களை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், கோவில் முன்பு இருந்த வேல் வளைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது. கோவையில் அடுத்தடுத்து 4 கோவில்கள் முன்பு டயர்களை போட்டு தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மாகாளியம்மன் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு உள்ள விநாயகர் கோவில் மற்றும் ரெயில் நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கும் சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து அவர்கள், 4 கோவில்கள் முன்பும் டயர்களை போட்டு தீ வைத்து எரித்த மர்ம ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் அனைத்து இந்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கண்காணிப்பு கேமரா

இதைத்தொடர்ந்து, கோவையில் கோவில்கள் முன்பு டயர்களை போட்டு தீ வைத்து எரித்த மர்ம ஆசாமிகளை பிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

அதில், என்.எச். சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், ஒரு ஆசாமி பழைய டயர்களை கோவில் முன்பு போட்டு தீ வைத்து எரிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த ஆசாமியை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், கோவையில் 4 கோவில்கள் முன்பு டயர்களை போட்டு தீ வைத்து எரித்த சம்பவம் திட்டமிட்டே நடந்துள்ளது. இதை ஒரே நபர் செய்திருக்க முடியாது. நேற்று முன்தினம் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த சம்பவங்கள் நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டயர்களை எரித்த ஆசாமிகளின் உருவம் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்