கோவையில் வியாபாரி உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி மாவட்டத்தில் புதிதாக 118 பேருக்கு தொற்று

கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரி உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும், கோவை மாவட்டத்தில் 118 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது.;

Update: 2020-07-19 04:41 GMT
கோவை,

கோவை மரக்கடை என்.எச்.ரோடு பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் டி.கே.மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் இதயம் தொடர்பான பிரச்சினையால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மார்க்கெட் மூடப்பட்டது.

70 வயது முதியவர்

தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்த 59 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த 13-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் உக்கடம் அன்பு நகரை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை அவர் இறந்தார். இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்து உள்ளது. அதில் 65 வயது முதியவர் மற்றும் 70 வயது முதியவர் ஆகியோரின் உடல்கள் பாதுகாப்பாக சுற்றப்பட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது.

சின்ன சேலத்தை சேர்ந்தவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பெல்லி நகரை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவர் உடல்நலக்குறைவால் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெளி மாவட்டத்தில் இருந்து வந்ததால் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதற்கிடையே நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்தார். கொரோனா இருந்ததால் அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லாமல் கோவையில் தகனம் செய்யப்பட்டது.

118 பேருக்கு தொற்று உறுதி

அதுபோன்று கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவை பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 40, 34 வயதுள்ள 2 போலீசார், கோவை சரவணம்பட்டி தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் 30 வயது ஆண், கொண்டையம்பாளையம், வெள்ளானைப்பட்டியை சேர்ந்த 2 பேர், அன்னூரை சேர்ந்த 4 பெண்கள், செல்வபுரம் 10 பேர் உள்பட 118 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதில் 53 பேர் பெண்கள், 65 பேர் ஆண்கள் ஆவர். இதனால் கோவை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,905 ஆக உயர்ந்து உள்ளது. கோவை செல்வபுரம், போத்தனூர், கரும்புக்கடை, சாரமேடு, தியாகி குமரன் வீதி, செட்டிவீதி, தியாகி குமரன் வீதி, இந்திராநகர், கருப்ப கவுடர் வீதி உள்பட 60 பகுதிகளில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் இந்த பகுதிகளை சேர்ந்த 500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அந்த அலுவலகம் மூடப்பட்டது.

21 பேர் வீடு திரும்பினர்

கோவையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 706 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 1,169 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்