டெல்டாவில், குறுவை சாகுபடி பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது வேளாண் இயக்குனர் பேட்டி

டெல்டாவில், குறுவை சாகுபடி பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது என்று வேளாண் இயக்குனர் தட்சணாமூர்த்தி தெரிவித்தார்.

Update: 2020-07-19 04:03 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்ட வேளாண்மைத்துறை தொடர்பான திட்டபணிகளின் முன்னேற்றம் பற்றிய ஆய்வு கூட்டம் கும்பகோணம் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழக அரசின் வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வட்டார வேளாண் இயக்குனர்கள், ஆத்மா திட்ட பணியாளர்கள், வேளாண் உதவி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வேளாண் இயக்குனர் தட்சணாமூர்த்தி பேசியதாவது:-

இந்த ஆண்டு குறுவை பருவத்திற்கு தேவையான பணிகளை ஒவ்வொரு வேளாண்மைத்துறை அலுவலர்களும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்கள் முழுமையான அளவில் சென்று சேர தேவையான பணிகளை சரியான காலகட்டத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.

ஆவணங்களை சரிபார்த்து

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு உரங்கள் சென்றால் உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் அனுப்பக்கூடாது. பயிர்க்காப்பீடு செய்யும் போது விவசாயிகளிடம் சரியான முகவரி உள்ள ஆவணங்களை சரிபார்த்து காப்பீடு செய்ய வேண்டும். இதனால் இழப்பீடு பெறும்போது தொகை வேறுபட்டு விவசாயிகளை பாதிக்கும். எனவே காப்பீடு ஆவணங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

90 சதவீதம் பணிகள்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதற்கு தேவையான விதை, உரங்கள் போதுமாக அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனத்திற்கு உள்ள பல்வேறு திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது விடுபட்ட விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை வைத்து எந்தவித பிணையமும் இல்லாமல் 4 சதவீத வட்டியில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற விவசாயிகள் நலன் சார்ந்த பல திட்டங்கள் வேளாண்மைத்துறையில் உள்ளன.

இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள் இழப்பீடு பெறுவதில் காலதாமதம் என்பது கிடையாது. காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதற்கு முன் சில விதிமுறைகளை செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. அதை செய்த பின்பு இழப்பீடு கிடைத்துவிடும். கடந்த ஆண்டுக்கான இழப்பீடு தொகை ரூ.68 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்களை வேளாண்மை இயக்குனர் தெட்சணாமூர்த்தி வழங்கினார். 

மேலும் செய்திகள்