குளித்தலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை ஏலம் எடுக்க வந்தவர்கள் சமூக இடைவெளியின்றி நின்றதால் பரபரப்பு

குளித்தலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை ஏலம் எடுக்க வந்தவர்கள் சமூக இடைவெளியின்றி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-18 06:22 GMT
குளித்தலை,

பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்திற்கு சொந்தமான கட்டளை மேட்டு வாய்க்காலை புனரமைத்து நவீனப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், வாய்க்காலின் இடதுகரையின் சரிவு பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக கட்டுமான பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குளித்தலை உதவி கலெக்டரிடம் அனுமதி பெற்றும், மாவட்ட வனத்துறை மூலம் மதிப்பீடு பெற்றும், அந்த மரங்கள் நேற்று குளித்தலை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைப்போன்ற பொது ஏலத்தில், ஏலம் எடுக்க பெரும்பாலும் சுமார் 20 பேர் மட்டுமே வருவார்கள். ஆனால் நேற்றைய ஏலத்தில் ஏலம் எடுக்க பெண்கள், மூதாட்டி உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

மொத்தம் 301 பேர் தலா ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் டோக்கன் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து ஏலம் தொடங்கியது. ஏலதாரர் ஒருவர் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 500-க்கு ஏலம் எடுத்தார்.

இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சுமார் 13 நிபந்தனைகள் கூறப்பட்டிருந்தது. அதில், ஏலத்தில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அடங்கும். இந்தநிலையில் ஏலத்திற்காக வைப்புத்தொகை செலுத்த வந்தவர்களில் சிலர் முக கவசம் அணியவில்லை. அதேபோல் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.

பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தியும், ஏலம் எடுக்க வந்தவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இது தொடர்பாக சிலர் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்