ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கொரோனாவுக்கு பலி மாவட்டத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு தொற்று

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பரிதாபமாக இறந்தார். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-18 06:10 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 907 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 506 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 43 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 391 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 10 ஆக உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு கீரனூர் அருகே இளையாவயல் கிராமத்தை சேர்ந்தவரான, 65 வயதுடைய ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் புதுக்கோட்டை போஸ்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் இளையாவயல் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் திருச்சியில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் அவருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அறந்தாங்கி ஒன்றியத்தில் இதுவரை 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அறந்தாங்கி பகுதியில் கொரோனா அதிக அளவில் பரவிவரும் நிலையில் மருத்துவமனைக்கு விரைவில் தலைமை டாக்டரை சுகாதாரத்துறையினர் நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்