கொரோனா பரவலை கட்டுப்படுத்த 11 கிராமங்கள் தனிமைப்படுத்தி மூடல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊட்டி அருகே 11 கிராமங்கள் மூடப்பட்டன.

Update: 2020-07-18 03:49 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ஓரநள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதற்காக ஊட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் 50 பேர் கலந்து கொள்வதாக அனுமதி பெறப்பட்டது. ஆனால், அரசு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் திருமண நிகழ்ச்சியில் பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில் தொற்று பாதித்தவர்களும் பங்கேற்றதால் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எப்பநாடு, கடநாடு, முட்டிநாடு, தொரையட்டி, இளித்தொரை, முள்ளிகூர், தங்காடு, எடக்காடு, தாம்பட்டி, தும்மனட்டி, ஓரநள்ளி ஆகிய 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர். இதை அடுத்து கிராமங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சளி மாதிரி எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 80 பேரிடம் முதல் கட்டமாக மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 880 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. முடிவில் பலருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.

11 கிராமங்கள் மூடல்

நீலகிரியில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேற்கண்ட 11 கிராமங்களை சேர்ந்த மக்களே தங்களது கிராமங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். அந்தந்த கிராம எல்லைகளில் தடுப்புகள், பேரல்கள் வைக்கப்பட்டு உள்ளன. தடுப்பு நடவடிக்கையாக வெளியாட்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களை சேர்ந்தவர்கள் வெளியிடங்களுக்குச் சென்று வந்தாலும் அனுமதி இல்லை என்று பேனர் வைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் வசிப்பவர்கள் உள்ளே வரக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 11 கிராமங்கள் மூடப்பட்டன. அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அந்தந்த ஊராட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். யாருக்கேனும் காய்ச்சல், சளி உள்ளதா என்று சுகாதார குழுவினர் வீடு, வீடாக ஆய்வு நடத்தி வருகின்றனர். சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்