கேரளாவில் இருந்து வேலூருக்கு ஆம்புலன்சில் 10 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட பச்சிளம் குழந்தை - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கேரளாவில் இருந்து வேலூருக்கு ஆம்புலன்சில் 10 மணிநேரத்தில் கொண்டு வரப்பட்ட பச்சிளம் குழந்தை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்,
கேரள மாநிலம் கும்பநாடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர், அந்தப் பகுதியில் இன்டர்நெட் மையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி டீனாஜார்ஜ். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அடூரில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. 7 நாட்களுக்கு பிறகு பச்சிளம் குழந்தைக்கு முதுகு தண்டுவட நோய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த நோயை கேரள மருத்துவமனைகளில் சரிசெய்ய முடியாது என்றும், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அங்குச் செல்லும்படி டாக்டர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்தத் தம்பதியர் வேலூருக்கு வர இ-பாஸ் பெற 2 முறை விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள், கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியிடம் முறையிட்டனர். அவர், செல்போனில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசி, வேலூருக்கு வர இ-பாஸ் பெற்றுக் கொடுத்தார்.
இதையடுத்து ஜார்ஜ் தம்பதியர் தங்களின் குழந்தையுடன் ஆம்புலன்ஸ்சில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அடூரில் இருந்து வேலூருக்கு புறப்பட்டனர். ஆம்புலன்சை சூரத் மேத்யூ என்பவர் ஓட்டினார். ஆம்புலன்ஸ் எந்த இடத்திலும் நிற்காமல் சுமார் 650 கிலோ மீட்டர் தூரத்தை 10 மணி நேரத்தில் கடந்து நேற்று காலை 8 மணிக்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையை அடைந்தனர். அங்குள்ள குழந்தைகள் சிறப்பு வார்டில் பச்சிளம் குழந்தை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 10 மணி நேரம் ஆம்புலன்சை தொடர்ந்து ஓட்டி வந்த டிரைவரை மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.