உடன்குடியில் 57 பேருக்கு கொரோனா: மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை
உடன்குடியில் 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 3 டாக்டர்கள் குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
உடன்குடி,
உடன்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.கடந்த 13-ந் தேதி முதல் நேற்று வரை 57 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதை தொடர்ந்து, உடன்குடியில் திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜ் தலைமையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு மற்றும் முழு ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கொரோனா தொற்றின் பாதிப்பால் உடன்குடியில் ஒரு தனியார் நிதி நிறுவனம், 2 தனியார் மருத்துவமனைகள், 2 மருந்துக்கடைகள், ஒரு இனிப்பகம் ஆகியவை மூடப்பட்ட நிலையில் வீடுகள் தோறும் பரிசோதனைகள் நடத்தபட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையில் டாக்டர்கள் ஜெயபரணி, பெரிய நாயகி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று யாருக்கும் காய்ச்சல் இருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக உடன்குடி புதுத்தெரு,வடக்குத் தெரு, நடுத்தெரு, முருகன் காலணி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வயது வாரியாகவும், நோய்த்தன்மையுள்ளவர்கள் வாரியாகவும் கணக்கெடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த தெருக்களில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.