கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி

கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2020-07-17 22:53 GMT
திருப்பூர்,

கருப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. இதை கண்டித்து திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தகவல் தொடர்பாளர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். இதில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய பாதுகாப்பு சட்டத்தில்

கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட அந்த பதிவுக்கு காரணமானவர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, அந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். இந்து கோவில்களுக்கு அருகில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைகள் மற்றும் இந்துக்கள் மனம் புண்படும்படி வைக்கப்பட்டுள்ள நாத்திக கல்வெட்டுகள் ஆகியவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் நினைவிடத்தை மறைக்கும் விதமாக திருப்பூரில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியதற்காக கண்டன அறிக்கைகள் வெளியிடும் அரசியல் கட்சியினர், இந்துக்கள் மனம் புண்படும்படி பதிவுகள் வெளியிட்டுள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை கண்டிக்காதது ஏன்?

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்