போலீஸ்காரருக்கு கொரோனா: கோவையில் மேலும் ஒரு போலீஸ் நிலையம் மூடல்

போலீஸ்காரருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து கோவையில் மேலும் ஒரு போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

Update: 2020-07-17 03:49 GMT
கோவை,

கோவையில் கொரோனாவின் தாக்கம் பொதுமக்களை மட்டுமல்லாமல் போலீசாரையும் பாதித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களில் போத்தனூர், மதுக்கரை, சூலூர், துடியலூர் ஆகிய 4 போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன. அந்த போலீஸ் நிலையங்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் 5-வதாக மேலும் ஒரு போலீஸ் நிலையம் நேற்று மூடப்பட்டது. கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜீப் டிரைவராக பணியாற்றிய போலீஸ்காரர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் நிலையம் மூடல்

இதையடுத்து அந்த போலீஸ் நிலையம் மூடப்பட்டு, கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. அத்துடன் அங்கு பணியாற்றி வரும் போலீசாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் அந்த போலீஸ் நிலையம் வின்சென்ட் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

போலீசாருக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் கோவை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு புகார் மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. இதற்காக போலீஸ் நிலையங்களுக்கு வெளியே சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, அதில் பணியில் இருக்கும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று வருகிறார்கள்.

ரோந்து பணி

இதேபோல் கோவை புறநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை வெளியே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் வைத்து மனுக்களை பெற போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் புறநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் மொத்தம் உள்ள போலீசாரில் 4-ல் ஒரு பங்கு அல்லது 3-ல் ஒரு பங்கு போலீசார் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்றும் மற்றவர்கள் வெளியே ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்