குடியாத்தம் அருகே, பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் தற்கொலை - மதிப்பெண் குறைந்ததால் விரக்தி

குடியாத்தம் அருகே பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் மதிப்பெண் குறைந்ததால் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2020-07-16 23:00 GMT
குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் பாலாஜி-சுமதி. இவர்களின் மகன் அசோக்குமார் (வயது 18). இவர், குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. படித்த பள்ளியில் அவர் முதலிடம் பெற்றார். ஆனால் மதிப்பெண் குறைந்து விட்டதே என மனவேதனையில் இருந்த அவர் நேற்று வீட்டுக்கு அருகே ஒரு மாந்தோப்பில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் அளித்த புகாரின்பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமானுஜம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவன் அசோக்குமாரின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட தகவலை கேட்டதும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கொட்டாரமடுகு கிராமத்துக்கு சென்று மாணவன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்