கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்று படுகாயம் அடைந்தவர்: நெடுஞ்சாலைத்துறை ஊழியர் வீட்டு முன்பு வாலிபரின் உறவினர்கள் திடீர் தர்ணா

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்று படுகாயம் அடைந்த வாலிபரின் மருத்துவ செலவை ஏற்காததால் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் வீட்டு முன்பு வாலிபரின் உறவினர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-16 22:15 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னபொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் கோப்பெருஞ்சோழன். இவர், நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வீடு அருகே கடந்த 1-ந்தேதி மாலை அவருக்கு சொந்தமான ஆடு ஒன்று அங்குள்ள அரசுக்கு சொந்தமான 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் இருந்து ஆட்டை மேலே எடுக்க அதே பகுதியைச் ராமனின் மகன் சிவா (வயது 34) என்பவரை கோப்பெருஞ்சோழன் அழைத்துள்ளார்.

சிவா கிணற்றில் இறங்கி பார்த்தபோது, அதில் தண்ணீர் இல்லாததால் ஆடு இறந்து கிடந்தது. ஆட்டை கயிறு கட்டி மேலே தூக்கினார். பின்னர் அவர் கிணற்றில் இருந்து மேலே ஏறி வரும்போது, தடுமாறி திடீரெனக் கிணற்றில் விழுந்தார். அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் படுகாயத்துடன் கிணற்றில் இருந்த சிவாவை மீட்டனர். சிவாவின் இரு கால்கள், முதுகு தண்டு வடம், இடது கை ஆகிய உடல் பாகங்கள் உடைந்தன.

கோப்பெருஞ்சோழன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சைக்கான மொத்த செலவை தானே ஏற்பதாக ஊர் பெரியவர்களிடம் கூறி, வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். சிவாவின் சிகிச்சைக்கான முழு தொகையை அவர் கொடுக்கவில்லை. தனியார் மருத்துவமனையில் பணம் கட்ட சிவாவின் குடும்பத்தாருக்கு வசதி இல்லை.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று மாலை தனியார் மருத்துவமனையில் இருந்து சிவாவை கார் மூலம் கொண்டு வந்து கோப்பெருஞ்சோழன் வீட்டின் முன்பு படுக்க வைத்து, அவரின் உறவினர்கள் நியாயம் கேட்டு திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கோப்பெருஞ்சோழனின் குடும்பத்தினர் தங்களின் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்