இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று - 9 மாத ஆண் குழந்தை பலி
புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 மாத ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட 5-ம்கட்ட ஊரடங்குக்கு பிறகு இது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையொட்டி புதுவை மாநிலத்திற்கு அத்தியாவசிய தேவைக்காக வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்களும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் நேற்று முன்தினம் வரை 1,596 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 1,079 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் 68 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 60 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 12 பேர் காரைக்காலிலும், 7 பேர் ஏனாம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை குணமடைந்து 58 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
இதற்கிடையே கடந்த 14-ந் தேதி காலை ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 மாத ஆண் குழந்தையை வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் அந்த குழந்தைக்கு தொற்று இருப்பது உறுதியானது. எனவே அந்த குழந்தையின் குடும்பத்தினருக்கும், சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழந்தையையும் சேர்த்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 1,743 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 379 பேர், ஜிப்மரில் 177 பேர், கொரோனா கேர் சென்டரில் 117 பேர், காரைக்காலில் 67 பேர், ஏனாமில் 33 பேர், மாகியில் ஒருவர் என மொத்தம் 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 947 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 27,916 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 270 பேருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.