தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
தமிழகத்தில் விவசாயத்தை குல தொழிலாளாக கொண்ட தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் உட்பிரிவுகளான குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி முதல் கருப்பு சட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நேற்று 250-வது நாளை எட்டியது.
இதையொட்டி நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை நகரில் உள்ள கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் நேற்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது. கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சண்முக சுந்தரம், மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாவட்ட செயலாளர் நாகராஜசோழன், தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை மகராஜநகரில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இணை செயலாளர் துரைபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் மானூர், சிவந்திப்பட்டி, மேலநத்தம், திருக்குறுங்குடி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.