10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது

சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.;

Update: 2020-07-16 09:40 GMT
சேலம்,

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணி காமராஜர் பிறந்தநாளான நேற்று முதல் தொடங்கியது.

இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு நேற்று விலையில்லா பாடப்புத்தகம் வழங்கும் பணி தொடங்கியது. அதன்படி சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி வழங்கினார். அப்போது, மாணவிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாடப்புத்தகங்களை வாங்கி சென்றனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் சேலம் நகர்ப்புறம், சேலம் ஊரகம், எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர் ஆகிய 5 கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மேற்பார்வையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். முக கவசங்களை அணிந்து வந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில், கொரோனா தொற்று பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் மாணவ-மாணவிகள் கட்டுப்பாடு நீங்கிய பிறகு அவர்கள் தங்களது பள்ளிகளுக்கு வந்து பாடப்புத்தகங்களை வாங்கி செல்லலாம். வெளியூர்களில் மாணவ-மாணவிகள் இருந்தால், அவர்கள் பள்ளிகள் திறந்த பிறகு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.

மேலும் செய்திகள்