மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 780 ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 780 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-16 06:26 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780 ஆக உயர்ந்துள்ளது. இதில், 463 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 49 பேர் குணமடைந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இறப்பு எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் திருப்பெருந்துறை ஊராட்சி சார்பில் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கறம்பக்குடியில், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர், அரசு மருத்துவமனை செவிலியர், கச்சேரி வீதியை சேர்ந்த 2 பேர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் என நேற்று மட்டும் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம், கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். கறம்பக்குடியில் அதிகரித்து வரும் தொற்றால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மணமேல்குடி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என அப்பகுதி வர்த்தக சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரத்தில் மணமேல்குடி மீன் மார்க்கெட்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்