திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம்: ஒரே நாளில் 5 பேர் பலி போலீஸ்காரர் உள்பட 40 பேர் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் மூதாட்டிகள் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் சென்னை போலீஸ்காரர் உள்பட 40 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.;

Update: 2020-07-16 02:48 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்து விட்டது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. மாவட்டத்தில் ஏற்கனவே 41 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

இந்த நிலையில் நத்தம் தாலுகாவை சேர்ந்த 76 வயது முதியவர், 70 வயது முதியவர் மற்றும் 80 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே நேற்று அந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

அதேபோல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி, பழனியை சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோரும் கொரோனா தொற்றுடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். ஒரே நாளில் 5 பேரின் உயிரை பறித்து கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 46 பேர் ஆக உயர்ந்தது.

மேலும் 40 பேருக்கு தொற்று

இதற்கிடையே நேற்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் சென்னையில் இருந்து பழனிக்கு உறவினர் வீட்டுக்கு வந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மற்றும் 5 சிறுவர்கள், 13 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் நகர் மற்றும் புறநகரில் 18 பேரும், நத்தம் தாலுகாவில் 8 பேரும், குஜிலியம்பாறை தாலுகாவில் 5 பேரும், பழனி தாலுகாவில் 3 பேரும், நிலக்கோட்டை, ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் ஆகிய தாலுகாக்களில் தலா 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்